39 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க 780 சூட்கேஸ்களில் ரூ.2000 கோடி?
- தமிழக போலீஸ் மற்றும் துணை நிலை ராணுவத்துடன் ஆங்காங்கே சோதனைகளையும் வருமான வரித்துறையினர் நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 3 நாட்களாக நடந்த வேட்டையில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிக அளவுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வருமான வரித்துறையையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
வருமான வரித்துறையுடன் ஆலோசித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் 39 தொகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து 58 சிறப்பு அதிகாரிகள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதி வாரியாக கட்சிகளின் வேட்பாளர்களை தினமும் கண்காணித்து வருகிறார்கள்.
தமிழக போலீஸ் மற்றும் துணை நிலை ராணுவத்துடன் ஆங்காங்கே சோதனைகளையும் வருமான வரித்துறையினர் நடத்தி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக நடந்த வேட்டையில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இந்த நிலையில் வருமான வரித்துறை, பறக்கும் படை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பையும் மீறி முக்கிய கட்சிகள் 39 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்ய ரகசிய ஏற்பாடுகள் செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் கோடிக்கணக்கான பணம் கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
கட்சிகளுடன் தொடர்பு இல்லாத பொதுவான நபர்களின் வீடுகளில் அந்த பணம் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் 39 தொகுதிகளிலும் பதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தங்களுக்கு சாதகம் இல்லாத தொகுதிகளில் அதிக அளவில் பணம் வினியோகிக்க சில கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் 780 சூட்கேஸ்களில் கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அடுக்கிக் கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எந்த கட்சி சார்பில் அந்த பணம் சென்றது என்று தெரியவில்லை.
இதையடுத்து அமலாக்கத்துறையினர், வருமான வரித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடங்கி விடும் என்பதால் அதற்கு முன்னதாக அந்த 2 ஆயிரம் கோடி ரூபாயையும் கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே வரும் நாட்களில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.