எர்ணாவூரில் மஞ்சள் நிறமாக வரும் குடிநீரால் மக்கள் தவிப்பு
- எர்ணாவூர், ராமநாதபுரத்தில் உள்ள சுமார் 10 தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
- குடிநீர் குழாய்களில் தண்ணீர் வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் வருகிறது.
திருவொற்றியூர்:
சென்னை நகரில் குடிநீர் தேவை பைப்புகள் மூலமும், சில இடங்களில் லாரிகள் மூலமும் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் அனைத்து இடங்களுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எர்ணாவூர் பகுதியில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
எர்ணாவூர், ராமநாதபுரத்தில் உள்ள சுமார் 10 தெருக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி நகராட்சியாக இருந்த போது அடிபம்பு மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். பின்னர் மாநகராட்சியானதும் மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதனால் இதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். அந்த தண்ணீரில் கழிவு நீரும் கலந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் கூடுதல் விலை கொடுத்து கடைகளில் கேன் தண்ணீரை வாங்கி குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. சிலர் மோசமான இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கழிவுநீர் கலந்த இந்த குடிநீரின் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை மெட்ரோ வாட்டர் துறையினரிடம் இதற்கான முடிவு வரவில்லை. மேலும் சுத்தமான தண்ணீரை வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கூறியதாவது:-
குடிநீர் குழாய்களில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஏன் ஒதுக்கப்பட்டது என்று எங்களுக்குத் தெரிய வில்லை. எங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. குடிநீருக்காக 2நாட்கள் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. அதுவும் 2மணி நேரம் மட்டுமே வருகிறது.கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்துவதால் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ. 2000 முதல் ரூ. 2500 வரை பணம் செலவாகிறது. ஒரு சில குடும்பத்தார்கள் பணத்தை கொடுத்து கேன் தண்ணீரை வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன்:-
மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் காட்டுப்பள்ளியில் இருந்து குழாய் மூலம் மணலியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுகிறது.
இங்கிருந்து ஏற்றி அங்கு இருந்து எண்ணூர், திருவொற்றியூர் மேற்கு பகுதிகள் அடங்கிய 1,2,4,6 ஆகிய வார்டுகளில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் 2 நாட்கள்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் 2 மணி நேரம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
ஆனால் இந்த 2 மணி நேரத்தில் முதல் அரை மணி நேரம் குடிநீர் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் தாழ்வான பகுதிகளில் குடிநீர் தேங்கி நிற்பதாலும் பின்னர் குழாய்கள் துருப்பிடித்து இருப்பதும் காரணம்.ஒரு சில வீடுகளில் தண்ணீரை சுத்திகரிக்கும் கருவியை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த கருவியும் மாதத்துக்கு ஒரு முறை பழுதாகி விடுகிறது அதை சரி செய்வதற்கு அதிக பணம் செலவாகிறது. மாசுஅடைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் உடலில் தோல் பிரச்சினைகள், தலை முடி கொட்டுவது போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக கையேந்தும் நிலையில் உள்ள மக்களின் நிலையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.