தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது.
- இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
இன்று கடைசி நாள் பிரசாரம் நடைபெறுவதையொட்டியும், நாளை மறுநாள் தேர்தல் அன்று மதுபோதையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.
இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அனைத்து மதுபான கடைகளிலும் குடிமகன்கள் மது குடிப்பதற்காக குவிந்தனர். இன்று முதல் 3 நாட்களும் மதுகுடிக்க முடியாது என்பதால் பலர் கூடுதல் மதுபாட்டில்களை வாங்கி வயிறு முட்ட குடித்தனர்.
மேலும் பலர் நன்றாக மது குடித்து விட்டு தங்களது தேவைக்காக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒரு பீர், 3 குவார்ட்டர் பாட்டில்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை மீறி கூடுதல் மது பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது.
ஆனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று குவிந்த மது பிரியர்கள் மூன்று, மூன்று பாட்டில்களாக வாங்கி தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கி குவித்து மொத்தமாக மறைத்து அள்ளிச் சென்றுள்ளனர்.
இது போன்று வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை திருட்டுத் தனமாக கூடுதல் விலைக்கும் அவர்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
இதைத் தொடர்ந்து அது போன்ற மது விற்பனையை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட 2½ மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் 2½ மடங்கு அளவுக்கு நேற்று கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, சென்னையில் சில கடைகளில் 4 மடங்கு வரை கூடுதலாக மது விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தார்.
இன்று முதல் 3 நாட்கள் மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மீண்டும் வருகிற 20-ந்தேதி திறக்கப்படும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி அன்று மதுக்கடைகள் மீண்டும் மூடப்படும். இதனால் தேர்தலுக்கு மறுநாளான சனிக்கிழமை அன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளது. அன்றும் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் கூடுதல் விலைக்கு மது விற்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.