அரசு பள்ளியிலும் சாதி பாகுபாடு காட்டுவதாக மாணவர்கள் புகார்- அதிகாரிகள் அதிரடி விசாரணை
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதிய ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக சில மாணவர்கள் புகார் கூறினர். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகின.
- மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமிக்கு உத்தரவிட்டார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மகேசுவரன். இவர் நடத்தி வரும் பெட்டிக்கடைக்கு அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பு மாணவர்கள் தின்பண்டம் வாங்க வந்தபோது, அவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்துவிட்டார்.
அந்த சம்பவங்களை அவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற மூர்த்தியுடன் சேர்ந்து செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பரப்பி விட்டார்.
இந்த வீடியோ தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் கரிவலம் வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி பெட்டிக்கடை உரிமையாளர் மகேசுவரன், அவரது மனைவி சுதா, அவரது நண்பர் ராமச்சந்திரன் என்ற மூர்த்தி, உறவினர்கள் குமார், முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் மகேசுவரன், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்த நிலையில் மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவின்பேரில் தாசில்தார் பாபு மற்றும் அதிகாரிகள் மகேசுவரனின் கடைக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதிய ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக சில மாணவர்கள் புகார் கூறினர். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகின. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமிக்கு உத்தரவிட்டார்.
அதன்படி பாஞ்சாகுளத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி மற்றும் கீழத்தெருவை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பள்ளியில் 4 வருடங்களாக பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையல் உதவியாளர் என பல்வேறு தரப்பினரிடமும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதிலோ, குழந்தைகளுக்கு உணவு வழங்குவதிலோ எந்தவிதமான சாதிய பாகுபாடும் கிடையாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சாதி பாகுபாடு பார்த்து தரம் பிரித்து உணவு வழங்குவதில்லை என்றும், அனைத்து குழந்தைகளையும் ஒரே மாதிரியாக அமர வைத்து தான் உணவு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
அவற்றை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து அந்த அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து பள்ளியில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டவில்லை என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.