தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்க கருவி பொருத்தியதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

Published On 2023-02-25 05:14 GMT   |   Update On 2023-02-25 05:14 GMT
  • அணை பலம் இழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
  • அணையில் நிலநடுக்க கருவி பொருத்த வேண்டும் என மத்திய கண்காணிப்பு குழுவினர் வலியுறுத்தியது.

கூடலூர்:

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

அணை பலம் இழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப குழுவின் ஆய்வுக்கு பின்னர் அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என அறிவுறுத்தியது. இதனை தடுக்க கேரள அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அணையில் நிலநடுக்க கருவி பொருத்த வேண்டும் என மத்திய கண்காணிப்பு குழுவினர் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் தற்போது கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், நிலநடுக்கம் வந்தால் 3.5 ரிக்டேர் அளவு முதல் 4.5 ரிக்டர் அளவு வரை தாங்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 125 ஆண்டுகளாக இப்பகுதியில் பெரிதாக நிலநடுக்கம் வரவில்லை. முல்லைப்பெரியாறு அணையை விட 10 மடங்கு அதிகம் தண்ணீர் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் இதுவரை நிலநடுக்க கருவி பொருத்தவில்லை.

இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்க கருவி பொருத்த கேரள பொறியாளர் குழு எந்த அனுமதியுடன் வந்தது. இதை வைத்து அணை மீண்டும் பலவீனம் அடைந்து விட்டதாக கேரளா நாடகமாடும். எனவே அந்த கருவிகளை அகற்ற வேண்டும் என்றார்.

Tags:    

Similar News