தமிழ்நாடு

விஜய் சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள்- விழா ஏற்பாடுகள் தீவிரம்!

Published On 2024-06-26 08:19 GMT   |   Update On 2024-06-26 08:19 GMT
  • அந்தந்த மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
  • நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா வருகிற 28-ந்தேதி மற்றும் ஜூலை 3-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூர் ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.

மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் ஆலோசனைக்கிணங்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை தினம் தினம் திரட்டி வருகிறார்.

இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்களை அழைத்து வரும் நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2024-ம் ஆண்டிற்கான தளபதி கல்வி விருது வழங்கும் விழாவிற்கு வருகை தரும் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் வண்டலூர் வழியாக கேளம்பாக்கம் வந்து ஓ.எம்.ஆர்.சாலையில் சோழிங்கநல்லூர் அக்கரை வழியாக நீலாங்கரையை அடுத்து விழா நடைபெறும் ராமசந்திரா கன்வென்சன் ஹாலுக்கு வர வேண்டும்.

இடம் பற்றி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நுழைவு கூப்பனில் உள்ள 'பார்கோடை' ஸ்கேன் செய்து மண்டபத்தின் முகவரியை தெரிந்து கொள்ளலாம்.

நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்காக 2 திருமண மண்டபங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

முகுந்தன் மகால், 159/1ஏ/என்.எச்.45 உத்தரமேரூர் ரோடு, மேலவளம் பேட்டை கருங்குழி (அருகில்) மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம். (தொடர்புக்கு ராஜேஷ்-8778128655, சபரி-9042773271, அனிதா மகால், ஜி.எஸ்.டி.ரோடு, சோத்துப்பாக்கம் (தொடர்புக்கு செந்தில் 9842098916, துரை-9841805777, ஆகாஷ்-9500272585 ஆகிய இரண்டு மண்டபங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் காலை 7.15 மணிக்கு விழா அரங்கிற்குள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News