தமிழ்நாடு

ரெயில் பெட்டியில் ஓட்டல் அமைத்து பயணிகள் சாப்பிடும் வசதி

Published On 2023-02-25 07:12 GMT   |   Update On 2023-02-25 07:12 GMT
  • ரெயில் பெட்டி ஓட்டலில் 40 பேர் ஒரே நேரத்தில் சாப்பிட வசதி செய்யப்படுகிறது.
  • ரெயில் பெட்டியின் உள்பகுதி பயணிகள் மகிழ்ச்சியாக உணவு அருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

சென்னை:

பயணிகள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ரெயில் பெட்டியிலேயே உணவு சாப்பிடக்கூடிய வசதியை தெற்கு ரெயில்வே ஏற்படுத்துகிறது. ரெயில் பெட்டியை ஓட்டல் போல வடிவமைத்து அங்கு அமர்ந்து உணவு சாப்பிடக்கூடிய சூழலை உருவாக்குகிறது.

சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் முதல் கட்டமாக இந்த ரெயில் பெட்டி ஓட்டல் அமைகிறது. பயன்படுத்தப்படாத ரெயில் பெட்டிகளை மறுசீரமைத்து ரெயில் நிலையங்களை ஒட்டிய பகுதியில் நிறுவி ரெயிலில் சாப்பிடக்கூடிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.

ரெயில் பெட்டி ஓட்டல் நடத்தும் உரிமம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. ரெயில் பெட்டி மற்றும் அதனை வைக்கக்கூடிய இடம் ஆகியவற்றை வழங்குகிறது. அதனை அவர்கள் ஓட்டல் போன்று மாற்றி அமைக்க வேண்டும்.

பயணிகள் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் மேஜை, இருக்கைகள், கைகழுவும் இடம், உணவு தயாரிக்கும் இடம் போன்றவை அந்த பெட்டியில் இருக்கும். ஓடும் ரெயிலில் சாப்பிடுகிற சூழலை தனியார் நிறுவனம் நிறுவுகிறது. இந்த ஓட்டல் 24 மணி நேரமும் செயல்படும். ரெயில் பெட்டி ஓட்டலில் 40 பேர் ஒரே நேரத்தில் சாப்பிட வசதி செய்யப்படுகிறது. ரெயில் பெட்டியின் உள்பகுதி பயணிகள் மகிழ்ச்சியாக உணவு அருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தினமும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு சாப்பிடுவதற்கு போதுமான ஓட்டல்கள் இல்லை. அதனால் அங்கு ரெயில் பெட்டி ஓட்டல் அமையும் பட்சத்தில் உதவியாக இருக்கும் என்றும், அதேபோல காட்டாங்கொளத்தூரில் அமைகின்ற ஓட்டல் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு அதிக பயன் உள்ளதாக இருக்கும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான ஆன்லைன் டெண்டர் விரைவில் விடுவதற்கு சென்னை ரெயில்வே கோட்டம் தயாராக உள்ளது.

Tags:    

Similar News