தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேங்கைவயல் மக்கள் முடிவு

Published On 2024-04-15 09:57 GMT   |   Update On 2024-04-15 09:57 GMT
  • வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர்.
  • சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து வேங்கைவயல், இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது.

இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் வேதனையில் இருந்து வரும் நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

வேங்கைவயல் கிராமத்தின் முகப்பில் இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு நீதி கிடைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News