விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டம்
- மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன.
- புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தொடர்ந்து கட்சி வளர்ச்சி பற்றி அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அரசியல் பணிகளுக்காக புதிய வியூகங்களை அமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலில் உள்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடந்தது.
இதில் கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த கட்டமாக மாவட்ட தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் என புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 100 ஆக பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் தற்போது 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து புதிய அரசியல் பயணத்தை அதிரடியாக அறிவித்த விஜய் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் கட்சி கொள்கைகள் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.