தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் தொடங்கியது

Published On 2024-06-14 05:36 GMT   |   Update On 2024-06-14 05:36 GMT
  • தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
  • வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி (வயது 71).

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 6 மாதத்திற்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து தீவிர பணியில் இறங்கி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.

இதன் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் செய்ய 21-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள், 24-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். மனுவை வாபஸ் பெற 26-ந் தேதி கடைசி நாளாகும்.

வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் என மொத்தம் 5 பேர் மட்டுமே தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் மற்ற அனைவரும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவிற்கு எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளதோடு அங்கு போலீசார், பேரிகார்டு மூலம் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

Tags:    

Similar News