பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 53 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்
- மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.55அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட அணையில் முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டது. அதனைதொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்வரத்தை பொறுத்து அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அதிகரித்தும், குறைத்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 52.66 அடியாக இருந்த நீர்மட்டம் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் தற்போது 53.08 அடியாக உயர்ந்துள்ளது. 821 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2423 மி.கனஅடியாக உள்ளது.
152 அடி உயரம் கொண்டுள்ள முல்லைபெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்படுகிறது. அதன்படி அணையின் நீர்மட்டம் 128.80 அடியாக உள்ளது. அணைக்கு 182 கனஅடிநீர் வருகிறது. 1033 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 4439 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.55அடியாக உள்ளது. 38 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 330.71 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 103.32 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 65.10 மி.கனஅடியாக உள்ளது.