புயல் குறித்த புதிய அப்டேட்... காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
- சென்னைக்கும் மச்சிலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- புயல் காரணமாக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.
நேற்று அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து அது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அந்த புயல் சின்னம் புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 290 கிலோ மீட்டர் தொலைவில் நிலவியது.
சென்னையில் இருந்து தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவில் அது நிலைக்கொண்டிருந்தது. மசூலிபட்டினத்தில் இருந்து 970 கிலோ மீட்டர் தொலைவுக்கு அது உள்ளது. தொடர்ந்து கடலோரத்தை நோக்கி மேற்கு வடமேற்கு திசை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
நாளை (சனிக்கிழமை) 2-ந்தேதி அந்த புயல் சின்னம் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதன் காரணமாக வடக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தொடர்ந்து அந்த புயல் சின்னம் மேலும் மேலும் வலுவாகி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும். இதன் காரணமாக நாளை மறுநாள் (3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) அது புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிக்ஜம்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் புயலாக வலுப்பெற்ற பிறகு அதன் நகர்வு வேகமும் அதிகரிக்கும். தற்போதைய கணிப்பின்படி இந்த புயல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சிறப்பு செய்தி அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வங்க கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. நாளை மறுநாள் அதன் சீற்றம் அதிகமாக இருக்கும்.
3-ந்தேதி புயலாக வலுவெடுத்த பிறகு அது வட தமிழ்நாடு தென் ஆந்திர பகுதியை நோக்கி நகரும். 4-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை அந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அதன் நகரும் திசை மற்றும் வேகத்தை பொறுத்து அது சென்னைக்கும் மசூலிபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய சிறப்பு தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இன்று (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்க கடலில் நகர்ந்து வரும் புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு (சனி, ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 4-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சென்னை உள்பட வட மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 3-வது வாரம் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்தில் பரவலாக 330 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த கால கட்டத்தில் 350 மில்லி மீட்டர் மழை பெய்யும். எனவே தற்போதைய பருவ மழை இயல்பை விட குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.
சென்னையில் நேற்று 55 இடங்களில் பலத்த மழை பெய்தது. 16 இடங்களில் மிக பலத்த மழை பெய்தது. என்றாலும் இதுவும் இயல்பை விட குறைவானதாகவே கருதப்படுகிறது.
இந்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் வருகிற 3, 4-ந்தேதிகளில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.