தை கிருத்திகை: திருப்போரூர் கோவிலில் 20-ந்தேதி நாள் முழுவதும் அன்னதானம்
- மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் தை கார்த்திகை, தைப்பூசம், மகா சிவராத்திரி விழா, அறுபடை வீடு ஆன்மிகப் பயணம், ராமேஸ்வரம்-காசி ஆன்மிகப் பயணம் ஆகியவற்றிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
தைகிருத்திகை பெருவிழா செங்கல்பட்டு மாவட் டம், திருப்போரூர், கந்த சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நாளை மாலை முதல் 20-ந் தேதி இரவு வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இங்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அரங்குகளாக அமைக்கப்படுவதோடு தைகிருத்திகை தினமான வருகிற 20-ந் தேதியன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
மகா சிவராத்திரி பெருவிழா கடந்தாண்டு வரை 5 கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களையும் சேர்த்து 7 கோவில்கள் சார்பில் மார்ச் 8-ந் தேதி அன்று மகா சிவராத்திரி பெருவிழாவினை விமரிசையாகவும், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்திட உரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் செயல் அலுவலர்கள் செய்திட வேண்டும்.
அறுபடை வீடு ஆன்மிக பயணத்தில் ஆண்டுக்கு 1,000 மூத்த குடிமக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் முதற்கட்ட பயணம் வருகிற 28-ந் தேதி அன்று தொடங்க உள்ளது.
இந்தாண்டிற்கான ராமேசுவரம் காசி ஆன்மிக பயணத்தில் 300 பக்தர்கள் 5 கட்டங்களாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.
முதற்கட்ட பயணம் பிப்ரவரி 1-ந் தேதி புறப்படும் நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள், காசியில் பக்தர்கள் தங்குவதற்கும், உணவிற்கும் செய்யப்பட்டுள்ள வசதிகள், பக்தர்களுக்கு உதவியாக செல்லும் அலுவலர் மற்றும் பணியாளர் குழு, மருத்துவக் குழு நியமனம் செய்து பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில்கள் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையிலும், பக்தர்களுக்கு பயனுள்ள வகையிலும் அமைந்திட துறை அலுவலர்கள் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.