தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களிடம் பணத்திற்கு பதில் தக்காளி பையை திருடி சென்ற கொள்ளையர்கள்

Published On 2023-07-03 04:08 GMT   |   Update On 2023-07-03 04:09 GMT
  • கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு உடுமலை எஸ்.பி. புரத்தை சேர்ந்த ஜெய ப்பிரகாஷ்(வயது 42), சரவணன் (44) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு வசூலான பணம் ரூ.3.50 லட்சத்தை பையில் கட்டி மொபட் இருக்கைக்கு அடியில் வைத்தனர். மேலும் வீட்டிற்கு வாங்கிய தக்காளி பையை முன்பக்கம் மாட்டி க்கொண்டு புறப்பட்டனர்.

வாளவாடி பிரிவு அருகே செல்லும் போது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் விழுந்தனர்.

அப்போது காரில் இருந்து இறங்கிய 3பேர் வீச்சரிவாளை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறி சத்தம் போட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு காரின் முன்பாக தனது பைக்கை நிறுத்தினார். உஷாரான கொள்ளையர்கள் பிரகாஷ், சரவணன் வந்த மொபட்டில் இருந்த பையை பறித்து காரில் தப்பினர்.

இந்நிலையில் கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது. மொபட்டின் முன்பக்கம் தொங்கவிடப்பட்டிருந்த தக்காளி பையை காணவில்லை. அதில் பணம் இருக்கிறது என்று எண்ணி கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் பிரகாசும், சரவணனும் நிம்மதி அடைந்தனர்.

மேலும் காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கக மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் தளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தற்போது தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பணத்திற்கு பதிலாக தக்காளி பையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News