சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட நிலைமை பாராளுமன்ற தேர்தலுக்கு வரக்கூடாது- அதிகாரிகள் அழைப்பு
- வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர்.
திருச்சுழி:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சத வீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அலுவலர்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெயசீலன் உத்தரவின் பேரில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊராட்சி பகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதி ளிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள பொது மக்களை சந்தித்து வரும் தேர்தல் அலுவலர்கள், மேற்பார்வையாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் நேரில் சென்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட மைலி கிராமத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கிராம மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் திருச்சுழி உதவி வாக்குப்பதிவு அலுவலரான ராஜேஸ் மற்றும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா மற்றும் சரவணக் குமார் ஆகியோரும் பொது மக்களை நேரில் சந்தித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விளக்கமாக எடுத்து ரைத்தனர்.
கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மைலி கிராமத்தினர் ஒன்று கூடி ஓட்டு மொத்தமாக வாக்களிக்க மறுத்து தேர்தலையே புறக்கணித்தனர். அந்த பகுதியில் 300 வாக்குகள் இருந்த நிலையில் மதியம் வரை 4 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகளின் சமாதானத்திற்கு பிறகும் கூட மிக மிக குறைவான இரட்டை இலக்க எண்ணிக்கையிலான வாக்குகளே பதிவானது.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறை வேற்றி 100 சதவீத வாக்குப் பதிவை பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தினர்.