தவெக தலைவர் விஜய்-க்கு திருமாவளவன் வாழ்த்து
- பெரியார் நினைவிடம் வந்த விஜய் அமைதியாக மரியாதை செலுத்தினார்.
- விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் பொது வெளியில் தலைவர் ஒருவருக்கு நேரில் மரியாதை செலுத்தி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இன்று காலையே பெரியார் நினைவிடம் வந்த விஜய் அமைதியாக மரியாதை செலுத்தி, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இந்த நிலையில், பெரியார் பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஜய்-க்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.