அரசு அதிகாரி போல் நடித்து மளிகை கடையில் பணம் திருடிய மர்மநபர்
- கடையில் சோதனை போட்டு, பிளாஸ்டிக் கவர் இருந்தால் உங்களுக்கு அபராதம் விதித்து விடுவார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி:
கோவை வடவள்ளி அருகே சோமையம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஒரு மளிகைக் கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று இந்த மளிகை கடைக்கு டிப்-டாப் உடையணிந்தபடி ஒருவர் வந்தார். அப்போது மளிகை கடையில் பெண் இருந்தார்.
மர்மநபர் தான் ஒரு அரசு அதிகாரி என்று அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் உங்கள் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளதாக வந்த தகவலின் பேரில் சோதனை செய்ய வந்ததாக தெரிவித்தார்.
இதை கேட்ட பெண் அதிர்ச்சியானர். தொடர்ந்து அந்த மர்மநபர், எனக்கு பின்னால் உயர் அதிகாரி ஒருவர் உங்கள் கடைக்கு சோதனைக்கு வருவார்.
அவர் வந்து கடையில் சோதனை போட்டு, பிளாஸ்டிக் கவர் இருந்தால் உங்களுக்கு அபராதம் விதித்து விடுவார். எனவே அவர் வருவதற்கு முன்பாக வேறு எங்காவது பிளாஸ்டிக் கவர்களை எடுத்து வைத்து விடுங்கள் என கூறினார்.
இதையடுத்து கடையில் இருந்த பெண்ணும், அங்கு இருந்த பிளாஸ்டிக் கவர்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு, பின்னால் மறைவான இடத்தில் கொண்டு வைப்பதற்காக சென்றார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர், பெண் உள்ளே சென்றதும், கடையின் கல்லாப்பெட்டியை திறந்து அதில் இருந்த பணம் முழுவதையும் அள்ளி சென்றார். ரூ.5 ஆயிரத்திற்கும் அதிகமாக பணத்தை எடுத்து சென்றார்.
அந்த பெண் வெளியில் வந்த போது கடையின் முன்பு நின்றிருந்த மர்மநபரை காணவில்லை. அத்துடன் கல்லாப்பட்டி திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த பணமும் மாயமாகி இருந்தது.
இதனால் தன்னை ஏமாற்றி திசை திருப்பி விட்டு, அந்த மர்மநபர் பணத்தை அள்ளி சென்ற விவரம் தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண் தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.
இது தொடர்பாக கடை உரிமையாளர் அங்குள்ள சக கடைக்காரர்களிடம் இது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இதுபோன்று ஏமாற்றி பணத்தை திருடி செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் தனது கடைக்கு வந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அப்போது வாலிபர் ஒருவர் வருவதும், கடையில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கல்லாப்பெட்டியில் பணத்தை திருடி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமாக நபர் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.