பிப்ரவரியில் டெல்லி செல்லும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் - ஏன் தெரியுமா?
- நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
- நான் உங்கள் தளபதி, நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்.
தமிழ்சினிமாவில் மிக பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்.சமீபத்தில் வெளியான இவரது 'லியோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் போதிலும் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். மக்கள் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
'லியோ' பட நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் பேசியபோது, "தளபதி என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள், நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்," என அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக தெரிவித்தார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் சென்னையை அடுத்த பனையூரில் நடந்துவருகிறது.
இந்நிலையில், விஜய்மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் இருந்து ஏராளமான விஜய் மக்கள்இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய், நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளார். இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும், ஆகியவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
2026- ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்னோட்டமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் விஜய் மக்கள்இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் செய்து நடிகர் விஜயை தலைவராக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் பிப்ரவரி 4-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.