தமிழ்நாடு (Tamil Nadu)

விஜய் கட்சி கொடியில் யானை- பகுஜன் சமாஜ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்

Published On 2024-09-30 08:14 GMT   |   Update On 2024-09-30 08:14 GMT
  • கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

சென்னை:

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். விஜய் கட்சி கொடியில் மேலும் கீழும் ரத்த சிவப்பு நிறமும், மைய பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய நிலையில் 2 போர் யானைகளும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

விஜய் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை, தங்கள் கட்சியின் சின்னம் என்றும், எனவே அதனை நீக்க வேண்டும் எனவும் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுத்தது.

இந்த நிலையில் கட்சி கொடியில் யானை இடம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது.

அரசியல் கட்சிகளின் கொடிகளில் இடம்பெறும் சின்னங்கள், உருவங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது இல்லை. கட்சிக்கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஆனால் கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News