சென்னையில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகைக்காக காத்திருக்கும் 4 ஆயிரம் திருநங்கைகள்
- ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும்.
- அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னை:
தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ 1000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயனடையாத பலர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதற்கிடையே திருநங்கைகள் பலரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் திருநங்கைகள் அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை கண்ணகி நகரில் உள்ள திருநங்கை விழிகள் அமைப்பு சென்னை மாவட்ட கலெக்டர் ராஸ்மி சித்தார்த்தை நேரில் சந்தித்து மனுவும் அளித்துள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியான துர்கா ஸ்ரீ இதுதொடர்பாக கூறியதாவது:-
ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பயனுள்ள திட்டமாகும். திருநங்கைகள் பலர் தற்போது பலரிடமும் கையேந்தி காசு வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் திருநங்கைகளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 4000 திருநங்கைகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டுள்ளோம். அவரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றார்.
சென்னை தண்டையார்பேட்டையில் 688 திருநங்கைகள் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 13 பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைத்து உள்ளது. மீதம் உள்ளவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு 21 வயதுக்கும் குறைவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
திருநங்கைகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் துர்க்கா ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது திருநங்கைகள் உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தாலேயே பொது இடங்களில் கையேந்துவது. பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக அனைத்து இடங்களிலும் திருநங்கைகளுக்கும் பணி வழங்க வேண்டும் என்கிற உத்தரவையும் அரசு பிறப்பித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இன்று திருநங்கைகள் பலர் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளனர். அரசின் நடவடிக்கைகள் மூலம் அனைத்து திருநங்கைகளும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் அதற்காகவே எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருநங்கைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திருநங்கைகள் கூறும்போது, இ சேவை மையங்களில் சென்று விண்ணப்பிக்கும்போது ஆண், பெண் என்கிற பகுதி உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடுவதற்கு எங்களுக்கு தகுதி இல்லை என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது மூன்றாம் பாலினத்தவர் என்ற பகுதியும் இருப்பதாக கூறியுள்ளனர்.