தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான 400 சீட்டுகள் காலியாக உள்ளன
- மருத்துவ இடங்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்டு 21 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.
- இறுதி கட்ட கவுன்சிலிங் முடிவு வருகிற 29-ந் தேதி வெளியாகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வு குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது.
மருத்துவ இடங்களுக்கு முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்டு 21 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நிரப்படாமல் இருக்கும் இடங்களுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. 3-ம் சுற்று கலந்தாய்வு கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி அதற்கான முடிவுகள் அக்டோபர் 18-ம் தேதி வெளியானது.
இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஒரே நேரத்தில் நடத்தப்படும் இறுதிக்கட்ட கவுன்சிலிங்கில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை சுயநிதி மருத்துவ கல்லூரிக்கு நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 50 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அகில இந்திய கவுன்சிலிங்படி அகில இந்திய ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் 677 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. பி.டி..எஸ். பிரிவில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 391 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இறுதி கட்ட கவுன்சிலிங் முடிவு வருகிற 29-ந் தேதி வெளியாகிறது.