கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 75 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு பிரிவு
- தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து பாதுகாக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
- பட்டாசு தீக்காயத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
சென்னை:
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்துக்களில் தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து பாதுகாக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீயினால் ஏற்படும் விபத்து மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு சிகிச்சை அளிக்க தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு 1981-ம் ஆண்டு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது.
தீக்காய விபத்து அதிகரித்ததால் அங்கு சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு தற்போது 75 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பட்டாசு தீக்காயத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
சிறிய காயம் மற்றும் பெரிய பாதிப்பு உள்ளவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளித்து பாதுகாக்க தேவையான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீ விபத்து ஏற்படும்போது 108 ஆம்புலன்ஸ் மூலம் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை மீட்டு உரிய நேரத்தில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு அழைத்து வரப்ப டுகிறார்கள்.
இந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் வார்டுகளில் லாமினார் பிளோ எனப்படும் சீராக காற்றை ஒரே திசையில் போக வைக்கும் ஒரு உன்னத தொழில் நுட்ப முறை செயலில் உள்ளது. இதனால் தீக்காயங்களில் ஏற்படும் தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தீக்காய பிரிவின் சிறப்பு என்னவென்றால், அறுவை சிகிச்சை அரங்குகள் ஒரே கட்டமைப்பில் செயல்படுகின்றன. அதனால் உடனடி அறுவை சிகிச்சைகளோ அல்லது மற்ற அறுவை சிகிச்சைகளோ எந்த ஒரு தாமதமும் இல்லாமல் நடக்கின்றன. இங்கு தோல் வங்கியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தீக்காய சிகிச்சையின்போது உள் நோயாளிகளின் நலன் கருதி அவர்களது சிகிச்சை மேம்பட மற்ற சிறப்பு பிரிவு மருத்துவர்கள் சிறு நீரக பிரிவு, குடல், மன நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர், இயற்பயிற்சியாளர், செவிலியர், நர்சு, உதவியாளர் ஆகியோருக்கு தீக்காயம் குணப்படுத்துவது பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 95 மருத்துவமனைகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் அரசு மற்றும் ஜிக்கா நிதி உதவியுடன் சுமார் ரூ.8.80 கோடி செலவில் அதிநவீன கருவி கள் இந்த துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று நுண்அறுவை சிகிச்சை நுண்ணோக்கி கருவிகள், ஒரு அதி அழுத்த பிராண வாயு சிகிச்சை கருவி, ஒரு லாசர் கருவி, தோல் எடுக்கும் கருவிகள், தோல் வலைப்பின்னல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் தீபாவளியின்போது பட்டாசு விபத்தினால் தீக்காயம் அடைவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.