தமிழ்நாடு

நெல் மூட்டைகளை பாதுகாக்க கூடுதல் சேமிப்பு கிடங்குகளை கட்ட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2025-03-13 11:02 IST   |   Update On 2025-03-13 11:02:00 IST
  • தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு.
  • நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் போது, எதிர்பாராத விதமாக ஆங்காங்கே ஏற்படும் மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடைவது என்பது வாடிக்கையாக நடந்து கொண்டே இருக்கின்றது.

அந்த வகையில், தற்போது கடலூர் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் பெய்த மழையால் ஆதிவராகநத்தம் பகுதியில் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வாழ்குடி, பில்லாளி, மேல பூதனூர், திருமருகல் போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.

இதே நிலைமை தான் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நிலவுகிறது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருங்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க கூடுதலாகக் கிடங்குகள் கட்ட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News