சேர்வலாறு அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது
- மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது.
- கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மழை குறைந்தது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணி முத்தாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. நேற்று மழை குறைந்த நிலையிலும் தொடர் நீர்வரத்தால் இன்றும் அணைகள் நீர்இருப்பு அதிகரித்துள்ளது.
143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 91.70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 105 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 861 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசத்தில் 80 அடியும், மணிமுத்தாறில் 102.05 அடியும், சேர்வலாறில் 67.39 அடியும் நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாநகரில் மழை எதுவும் பெய்யவில்லை. புறநகரில் களக்காடு, அம்பையில் பரவலாக மழை பெய்தது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகதியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கொடுமுடியாறு அணையில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வானம் பார்த்த பூமியான சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் மழை பெய்தது.
அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் 3.50 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலவியது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரம் தூத்துக்குடி மாநகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களாக பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.