வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஜெயக்குமார் வலியுறுத்தல்
- வேங்கைவயல் வழக்கில் திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது.
- பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இறுதி வரை அஇஅதிமுக துணை நின்று போராடும்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என விசிக, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வேங்கைவயல் வழக்கில் திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(24.01.2025) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
எதையோ மூடி மறைக்க காலம் கடந்த அவசர குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாக தாக்கல் செய்துள்ளது ஸ்டாலின் அரசு!
சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விடும் என்று ஆளும் ஸ்டாலின் அரசிற்கு ஏற்பட்ட அச்சத்தில் உருவாக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையா?
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.
வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது!
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காகவும்-உரிமைகளுக்காகவும் இறுதி வரை அஇஅதிமுக துணை நின்று போராடும்" என்று பதிவிட்டுள்ளார்.