FAIR DELIMITATION : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்
- ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது.
- தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு 5 முக்கிய பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி விளக்கமாக உரையாற்றினார்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கூட்டாட்சியை காக்கும் மிக மிக முக்கியமான நாளாக வரலாற்றில் இந்த நாள் அமைய போகிறது. இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்திருப்பது தனிச்சிறப்பு.
ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளதை உங்கள் வருகை இந்தியாவிற்கு உணர்த்துகிறது. மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால் தான் கூட்டாட்சி தன்மை நிலைத்திருக்கும். தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.
இதன்பின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு 5 முக்கிய பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி விளக்கமாக உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பேச உள்ளனர். இதன்பின் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்களை விடுக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அதனை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இறுதி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.