தூத்துக்குடியில் அதிகாலையில் 4 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை
- உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிப்பு.
- தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
அண்ணாநகர், பிரையன்ட்நகர், செயின்ட் பீட்டர் கோவில் தெரு, லயன்ஸ் டவுன் மற்றும் வி.வி.டி. சிக்னல் முதல் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. திருச்செந்தூர் சாலை உட்பட முக்கிய சாலைகளில் உள்ள கிடங்குகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.
இந்த பலத்த மழையால் தாமோதரன் நகரில் உள்ள ராஜா என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அவரது மனைவி மற்றும் மகன் வெளியூர் சென்று இருந்ததால் ராஜா அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். எனினும் அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது.
இந்த மழையால் தூத்துக்குடி, முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவெளி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க சிலர் நாட்கள் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மழைநீர் வளாகத்தை சுற்றி குளம்போல் காணப்படுவதுடன், போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் கோப்புகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சாயர்புரம் வட்டார பகுதியில் அதிகாலை 4 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.