மழையில் நனைந்தபடி சென்ற மாணவ-மாணவிகள்.
குமரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை
- குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது.
- விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது
நாகர்கோவில்:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு, கோதையாறு, தடிக்காரண்கோணம், கீரிப்பாறை, கொட்டாரம், மயிலாடி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு பகுதியில் 36.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. கொட்டாரத்தில் 3.4, சிற்றாறு-1 பகுதியில் 1.8 மில்லி மீட்டர், சிற்றாறு-2 பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
இந்த மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். நாகர்கோவில் மாநகர் பகுதியில் இன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. சிறிது நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விட்டு விட்டு பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.
காலை நேரத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளி சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்குச் சென்று ஆண்-பெண் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.