சிவகிரி, வாசுதேவநல்லூரில் 1 மணி நேரம் கனமழை தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது
- கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
- வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
சிவகிரி:
சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் 4 நாட்களாக சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், ராயகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மேகமூட்டமாக இருந்தது.
தொடர்ந்து 4 நாட்களாக மாலை நேரங்களில் இடி-மின்னலுடன், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை தொடர்ந்து பெய்தது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாய பணிகளையும் தொடங்கினர். கோடையில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சி தந்தது.
தற்போது நெல் அறுவடை முடிந்து அடுத்த போகம் நெல் நடும் நிலையில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
வயல்கள் மற்றும் காடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரினை கொண்டு விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மகிழ்ச்சியாக தொடங்கி உள்ளனர்.
வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கீழ பஜார் பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
மேலும் இந்த பகுதி வழியாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கடந்த நாட்களில் பெய்த மழையினால் இந்த பகுதி பாதிப்படைந்த போது மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரியிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் இந்த பகுதியை கண்டுகொள்ளாத காரணத்தினால் தற்போது பெய்த மழைக்கு அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இப்பகுதியில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.