'ஊட்டச்சத்து உறுதி செய்' திட்டத்தின் 2-வது தொகுப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
- மகளிரால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை சுவைத்து அது குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- மேடையில் பேசிய தாய்மார்களின் குழந்தைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.
அரியலூர்:
பள்ளிக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் பொருட்டு, ரூ.22 கோடியில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் 2வது தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரம் வாரணாசியில் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கிருந்த உணவு பொருட்கள் கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். அப்போது மகளிரால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை அவர் சுவைத்து அது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்த அங்கன்வாடிக்கு சென்று குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் அவர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை அவர் வழங்கினார்.
பின்னர் அவர் அங்கு மரக்கன்றை நட்டார். பின்னர் அவர் விழா மேடைக்கு சென்றபோது, பூக்களுடன் நின்றிருந்த குழந்தைகளை பார்த்து அருகில் சென்றார். அப்போது குழந்தைகள் அவருக்கு பூக்களை பரிசளித்தனர். அதனை மகிழ்வுடன் பெற்றுகொண்ட அவர் விழா மேடைக்கு சென்றார்.
மேடையில் வாரணாசியை சேர்ந்த ராகவி, பரமேஸ்வரி சக்கரபாணி, மல்லூர் ராஜேஸ்வரி கார்த்திக், மரவனூர் ஜெயபிரியா பாண்டியன், ஆயிஷா பானு உள்ளிட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு அவர் ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி இத்திட்டத்தின் 2-வது தொகுப்பினை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் இத்திட்டத்தின் முதலாம் கட்ட பயனாளிகள், இத்திட்டத்தின் பயன் குறித்து பேசினர். சுகந்தி என்ற பெண் பேசும்போது, என் குழந்தை குறை மாசத்தில் பிறந்ததால் எடை குறைவாக இருந்தது. பல இடங்களில் சென்று பார்த்தபோது எந்த பயனும் இல்லை. இந்நிலையில் முதலமைச்சரின் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கப்பட்டது. இதன் பயனாக எனது குழந்தைக்கு நல்ல வளர்ச்சி தெரிந்தது. தற்போது எனது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து முதலாம் கட்ட பயனாளி ரம்யா பேசும்போது, எனது குழந்தையின் எடைக்கு ஏற்ற உயரமில்லை. உங்கள் திட்டம் குறித்து கேள்விபட்டு அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஊட்டச்சத்து பெட்டகத்தை பெற்று அதனை சாப்பிட்டு, எனது குழந்தைக்கு தாய்பால் புகட்டினேன். இதனால் எனது குழந்தை மிகுந்த ஆரோக்கியமாக உள்ளது என்று அவர் கூறினார்.
மகாலட்சுமி என்பவர் பேசும்போது, போன வருடம் கொடுத்த தொகுப்பினை நானும் சாப்பிட்டேன், குழந்தைக்கும் கொடுத்தேன். தற்போது நானும் குழந்தையும் நலமாக உள்ளோம். அதனால் தான் உங்களை பார்த்து நன்றி சொல்ல வந்தேன் என்று அவர் பேசினார்.
மேடையில் பேசிய தாய்மார்களின் குழந்தைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கீதா ஜீவன், சிவசங்கர், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆர்.ராசா, அருண் நேரு, சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கலெக்டர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.