தமிழ்நாடு

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது- முதலமைச்சர்

Published On 2024-11-25 08:17 GMT   |   Update On 2024-11-25 08:17 GMT
  • முதலமைச்சர் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அருகில் சென்று விசாரித்தார்.
  • ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சோழிங்க நல்லூர், கண்ணகி நகர், எழில் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

கண்ணகி நகரில் அவர் சென்ற வழி நெடுக ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்ததும் முதலமைச்சர் காரை விட்டு இறங்கி நடந்து சென்று அவர்களிடம் நலம் விசாரித்தும், கை குலுக்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

அப்போது சிலர் புத்தகங்களை அவருக்கு பரிசளித்தனர். பலர் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். அவற்றை பொறுமையுடன் பெற்றுக் கொண்டார். நடக்க முடியாமல் அமர்ந்து இருந்த மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் அருகில் சென்று விசாரித்தார். அவர்கள் கொடுத்த மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

அதை தொடர்ந்து கண்ணகி நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறு வாழ்வு சேவைகள் வழங்குவதற்காக ரூ.3.08 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்.

மாற்று திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற விழையும் பகுதிகளில் ஒன்றான கண்ணகி நகரில் இச்சேவைகளை முதலில் வழங்க அரசு மிக கவனமாக இந்த பகுதியை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன் முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மையமானது பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அணுகல் வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாண்டிசோரி மழலையர் வகுப்புகளையும் பார்வையிட்டார்.அப்போது சின்ன குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.

அதை தொடர்ந்து அவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய மு.க. ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுகள், பென்சில், கிரேயான்ஸ், ஸ்கேல் அடங்கிய பரிசு பை ஒன்றை பரிசாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, க.கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் எழில் நகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது கனமழை எச்சரிக்கை பற்றியும் அது தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கனவே அனைத்து மாவட்ட கலெக் டர்கள் கூட்டம் நடத்தி பருவமழை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட கலெக்டர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.

பெருமழையை எதிர்பார்க்கிறோமோ இல்லையோ எதையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றார்.

அதைதொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான நிதிகள் பெறுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் என்னென்ன பேசப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு எம்.பி.க்கள் கூட்டம் நடத்தி, என்னென்ன தேவைகள் என்னென்ன செய்வார்கள் பற்றி பேச வேண்டும் என்று குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து விசயங்களிலும் கவனம் செலுத்தி பேசுவார்கள் என்றார்.

Tags:    

Similar News