தமிழ்நாடு

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது- மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்

Published On 2025-03-11 12:08 IST   |   Update On 2025-03-11 12:08:00 IST
  • 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அங்கு சென்றனர்.
  • சிறுத்தையை மருதமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை அலுவகத்திற்கு கொண்டு சென்றனர்.

கோவை வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் அவர் ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, தோட்டத்தில் வளர்த்து வந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை அடித்து கொன்றது.

இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியிலும் புகுந்த சிறுத்தை, அங்கும் ஆடுகளை அடித்து கொன்றது.

தொடர்ந்து சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆடுகளை அடித்து கொன்று வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

ஊருக்குள் நடமாடும் சிறுத்தையை பிடித்து அடர் வனத்திற்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க தொண்டாமுத்தூர் அட்டுக்கல் மற்றும் ஓணாப்பாளையம் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

ஆனால் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுத்தை ஆடுகளை அடித்து கொன்ற அதே தோட்டத்திற்கு வந்து சென்றது. இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் சிறுத்தை மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

அதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டினை ஆடுகளை தேடி வந்த தோட்டத்து வீட்டு பகுதியில் வைத்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தையும் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு பூச்சியூர் அருகே உள்ள கலிக்க நாயக்கன் பாளையத்தில் விவசாய நிலத்தில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக 12 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அங்கு சென்றனர். அவர்கள் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கால்நடை மருத்துவரும் அங்கு வரவழைக்கப்பட்டார்.

தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் சிறுத்தை மயங்கியது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கூண்டில் பிடித்து அடைத்தனர்.

தொடர்ந்து சிறுத்தையை மருதமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை அலுவகத்திற்கு கொண்டு சென்றனர்.

பிடிபட்ட சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால், வனத்துறையினர் கால்நடை டாக்டர் குழுவினர் அதனை கண்காணித்து, காயத்துக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். புலியின் உடலில் எப்படி காயம் ஏற்பட்டது என தெரியவில்லை. தொடர்ந்து சிறுத்தையின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பிடிபட்ட சிறுத்தையின் உடலில் காயமும் உள்ளது. அதற்கு தற்போது சிகிச்சை அளித்து, பராமரித்து வருகிறோம்.

இன்று ஒருநாள் முழுவதும் சிகிச்சை அளித்து, அதன் உடல் நிலையை கண்காணிக்க உள்ளோம். நாளை உடல்நிலை சரியானதும் சிறுத்தை அடர் வனத்திற்குள் விடப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News