மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்: நெஞ்சுவலி எனக்கூறி தரையில் உருண்ட மேயரால் பரபரப்பு
- மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர்.
- தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை சூழ்ந்து கொண்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலருக்கும் காங்கிரஸ் மேயர் சரவணனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் விழுந்து மேயர் உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் குட்டி தட்சிணாமூர்த்தி, திவ்யபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் செல்வம், ம.தி.மு.க. கவுன்சிலர் பிரதீபா உள்ளிட்ட பலர் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், அதனை தீர்வு செய்யும்படியும் மேயர் சரவணனிடம் கோரிக்கை வைத்தனர்.
காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் அய்யப்பன் பேசும்போது, சுதா எம்.பி., பொதுமக்களை சந்திப்பதற்காக மாநகராட்சி ஏற்பாட்டில் அலுவலகம் அமைத்து தரவேண்டும் என மேயருக்கு தபால் கொடுத்துள்ளார். இந்த தபாலிற்கு மேயர் ஏன் பதில் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மேயர் சரவணன் அது சாதாரண கடிதம். எனக்கு தபால் முறையாக பதிவு தபாலில் வரவில்லை. ஆகவே நான் அதற்கு பதில் கூற முடியாது என்றார்.
இதனால் ஆவேசம் அடைந்த கவுன்சிலர் அய்யப்பன், சுதா எம்.பி., மேயர் சரவணன், நான்(அய்யப்பன்) ஆகிய 3 பேருமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவா்கள். நாங்கள் 3 பேரும் ஒரே கட்சியில் இருந்தும் மேயர் சரவணன், சுதா எம்.பி.யின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். எனவே இதனை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.
இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள், மாநகராட்சி செயல்திட்ட பொருளின் கோப்புகள் எங்கு உள்ளது. அதில் கையெழுத்திட்டீர்களா? என மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மற்ற உறுப்பினா்களும் அதே கேள்வியை எழுப்பினர்.
இதனால் கோபம் அடைந்த மேயர் சரவணன், கோப்புகள் என்னிடம் தான் இருக்கின்றன. இந்த கூட்டம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் கோப்புகளை நான் கொண்டு வந்து காட்டுகிறேன் என்றார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத மற்ற கவுன்சிலர்கள், கோப்புகளை காட்டிவிட்டு தான் நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும் என்றனர்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய மேயர் சரவணன், தனது நாற்காலிக்கு பின்புறம் உள்ள ஓய்வு அறையை நோக்கி வேகமாக சென்றார்.
இதனை பார்த்த கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி விரைந்து சென்று ஓய்வு அறைக்குள் மேயர் சரவணனை செல்ல விடாமல் கதவை மூடி தடுத்தார்.
தொடர்ந்து குட்டி தட்சிணாமூர்த்தியின் தலைக்கு மேலே தாவிச் சென்ற மேயர் சரவணன், ஓய்வு அறையின் கதவை தள்ளியபடி செல்ல முயன்றார். இதனால் மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை சூழ்ந்து கொண்டனர்.
அப்போது மேயர் சரவணன், திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறி கூட்ட அரங்கில் தனது மேயர் உடையுடன் தரையில் விழுந்து உருண்டு புரண்டார். தன்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று அலறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த துணை மேயர், மாநகராட்சி அதிகாரிகள் மேயர் சரவணனை ஓய்வு அறைக்கு தூக்கி சென்றனர்.
இந்த சம்பவத்தால் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் அமளி துமளியானது.