தமிழ்நாடு

குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட அரசு எப்படி அனுமதித்தது? தேசிய மகளிர் ஆணையம் கேள்வி

Published On 2024-12-31 03:31 GMT   |   Update On 2024-12-31 03:31 GMT
  • தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குழுவினர் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
  • வன்கொடுமை நடைபெற்ற இடத்திலும் விசாரணை குழு நேரில் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குழுவினர் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது, பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், போஷ் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தி உள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளிடமும், பல்கலைக்கழக காவலாளிகள், விடுதி காப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர், மாணவியின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வன்கொடுமை நடைபெற்ற இடத்திலும் விசாரணை குழு நேரில் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் விசாரணை தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி நேற்று கூறியதாவது:- 'விசாரணை இன்னும் முடியவில்லை, செவ்வாய்க்கிழமையும் (இன்று) நடைபெறும். இந்த விசாரணைக்கு பிறகு, மத்திய அரசிடம் இறுதிக்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றார்.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆய்வறிக்கை விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கூறியுள்ளார்.

மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டோம். குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட அரசு எப்படி அனுமதித்தது? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

Similar News