தமிழ்நாடு

ஜெகபர் அலி மரணம்- போலீசார் கடமையை செய்யவில்லை என பிரேமலதா குற்றச்சாட்டு

Published On 2025-01-24 13:50 IST   |   Update On 2025-01-24 13:50:00 IST
  • ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொண்டு பேசினார்.

புதுக்கோட்டை:

கனிம வள கொள்ளையை தடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு இன்று தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொண்டு பேசினார்.

விஜயகாந்தின் தம்பியாக கனிம வளக் கொள்கையை ஜெகபர் அலி தட்டி கேட்டு உள்ளார். காவல்துறை தங்கள் கடமையை செய்திருந்தால் நாங்கள் போராட வேண்டி இருக்காது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் கனிம வளம் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. 686 குவாரிகள் உள்ளது. உரிய அரசு அனுமதி இல்லாமலே பல குவாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கு முன் அனுமதி இல்லாமல், கடந்த 2 வருடமாக கனிம வளத்தை கொள்ளையடித்து, மக்களுடைய செல்வத்தை சுரண்டி நமது நாட்டையே இப்போது கேள்விக்குறியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இதெல்லாம் கண்டிக்கப்பட வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள். சிறுபான்மையினரின் பாதுகாப்பு நாங்கள் என்கிறார்கள். ஒரு இஸ்லாம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இங்கே பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள். சிறுபான்மையினரின் உற்ற தோழன் என்று தி.மு.க. சொல்கிறது. இஸ்லாமியருக்கு நாங்கள் பாதுகாவலன் என்று சொல்கிறார்கள்.

தற்போது இங்கு ஜெகபர் அலியை இழந்து நிற்கும் இந்த குடும்பத்திற்கு அவர்கள் என்ன சொல்ல போகின்றார்கள். இதற்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இந்த இஸ்லாமிய குடும்பத்திற்கு யாராவது ஆதரவு தெரிவிக்கிறீர்களா? ஏன் கேட்கவில்லை எல்லாம் பயம்.

ஆனால் தே.மு.தி.க. எதற்காகவும் பயப்படாது. நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம், மக்கள் பக்கம் எப்போதும் இருக்கும். இது போன்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்றுமே பாதுகாப்பு கேப்டனின் தே.மு.தி.க. தான்.

இஸ்லாமிய சகோதரர்களே ஆளும் கட்சிக்கு பயந்து ஒதுங்க கூடாது. இந்த ஆர்ப்பாட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இந்த குடும்பத்திற்கு நியாயம் குடும்பத்தில் நீதி கிடைக்கும் வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் பார்த்தசாரதி, ஜாகீர், மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சசி, நகரச் செயலாளர் பரமஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News