ஆதரவற்ற மாணவர்களின் கல்வி உதவிக்காக பொதுமக்களின் செருப்பை சுத்தம் செய்யும் பேராசிரியர்
- எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை தற்போது இந்த பள்ளி நடைபெற்று வருகிறது.
- 13 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்:
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு ஆதரவற்ற மாணவர்களுக்காக பேராசிரியர் டாக்டர் சிவ.செல்வக்குமார் ஒரு பள்ளியை தொடங்கினார். இந்த மாணவர்களுக்கு இலவச கல்வியுடன், சீருடை, கல்வி உபகரணங்கள், மதிய உணவு போன்றவற்றையும் வழங்குகிறார். இவர், 59-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
தனது பணி போக கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தனது பள்ளியை நடத்திட பொது இடங்களில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்கிறார். அப்படி செய்யும்போது துண்டறிக்கைகளை கொடுத்து பொதுமக்களிடம் நிதி திரட்டுகிறார். இதற்காக தமிழக அரசின் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். 11 பல்கலைக்கழகங்களில் இவர் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்.
231 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் 130-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் படிப்பதாக கூறுகிறார். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை தற்போது இந்த பள்ளி நடைபெற்று வருகிறது. 13 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவரின் செயல்பாட்டை அறிந்து பொதுமக்கள் தங்களின் செருப்பை அவரிடம் கொடுத்து சுத்தம் செய்து கொண்டு, அதற்காக அவர் வைத்துள்ள உண்டியலில் நிதி வழங்குகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் சென்று பொதுமக்களின் செருப்பை சுத்தம் செய்ததாகவும், இதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் பேராசிரியர் கூறினார்.
இவரது மனைவி பள்ளியை பார்வையிட்டு, மதிய உணவையும் சமைத்துக் கொடுக்கின்றார். பல்வேறு மாநிலங்களில் இருந்து 576-க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். இந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று திருவொற்றியூர் தேரடி தெருவில் வடிவுடையம்மன் கோவில் முன்பு பொதுமக்களின் செருப்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன், அரிமா சங்க நிர்வாகிகள் துரைராஜ், சண்முகம் உள்ளிட்டோர் தங்கள் செருப்பை அவரிடம் கொடுத்து சுத்தம் செய்ததுடன், அதற்காக நன்கொடை வழங்கினர். மாணவர்களுக்காக செருப்பை சுத்தம் செய்துவரும் பேராசிரியருக்கு பொதுமக்களின் பாராட்டு குவிகிறது.