தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் - கைவிரித்த எடப்பாடி பழனிசாமி.. பதில் கூறாமல் சென்ற பிரேமலதா
- அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்திருந்தார்.
- தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக யார் சொன்னது? என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும். எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க.வை வீழ்த்துவது மட்டும் தான்" என்று தெரிவித்தார்.
அப்போது தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக யார் சொன்னது? என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா கூறி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அக்கேள்விக்கு பதில் அளிக்காமல் பிரேமலதா கடந்து சென்றார்.
இந்நிலையில், மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் எக்ஸ் பக்கத்தில், "சத்தியம் வெல்லும் நாளை நமதே" என்று பதிவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.