தமிழ்நாடு

இன்ஸ்டா மூலம் உருவான காதல்: திருமணமாகி 5 நாட்கள் ஆன நிலையில் காதல் மனைவியை விட்டு பிரிந்து சென்ற கணவன்

Published On 2025-03-04 14:58 IST   |   Update On 2025-03-04 14:58:00 IST
  • இன்ஸ்டாகிராம் காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
  • மனைவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட பெரியண்ணன் போச்சம்பள்ளி அழைத்து வந்தார்.

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல் அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரது மகன் பெரியண்ணன் (வயது23).

இவர் கடந்த 2023-ம் ஆண்டு அக்னிபாத் மூலம் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார்.

தற்போது இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜெப்பல்பூர் என்ற பகுதியில் ராணுவ வீரராக பணி செய்து வருகிறார்.

இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வடமலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவன் என்பவரது மகள் அனுப்பிரியா (22) என்பவருடன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார்.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதலர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாகவே தங்களது அன்பை ஆன்லைன்னில் பரிமாறிக் கொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில் அனுப்பிரியாவின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்த தகவலை அனுப்பிரியா இன்ஸ்டாகிராமில் தனது காதலன் பெரியண்ணனுக்கு தெரிவித்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலுக்கு பெற்றோர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பெரியண்ணன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ராணுவத்திலிருந்து விடுமுறை பெற்று 15 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

சொந்த ஊருக்கு வந்தவுடன் போச்சம்பள்ளிக்கு சென்று கடந்த 28-ந்தேதி அனுப்பிரியாவை அழைத்துக்கொண்டு அவரது நண்பர் உதவியுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்று அங்கு உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.

திருமணம் முடிந்த கையுடன் தேன்நிலவு கொண்டாடுவதற்காக தனது காதல் மனைவியுடன் பெரியண்ணன் ஊட்டிக்குச் சென்று அங்கு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக தெரிகிறது.

பின்னர் தேன் நிலவையும் கொண்டாடிய காதல் தம்பதியினர் 4 நாட்கள் முடிந்த நிலையில் தனது மனைவியை பெரியண்ணன் ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

இதற்கிடையே அனுப்பிரியா வீட்டில் மாயமான விவகாரம் தெரியவந்து, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனுப்பிரியாவை தேடிவந்தனர்.

இந்த நிலையில், மனைவியை பெரியண்ணன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பெரியண்ணன் உறவினர்கள் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல், அனுப்பிரியவை அவரது வீட்டில் விட்டுவிட்டு வரும்படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட பெரியண்ணன் போச்சம்பள்ளி அழைத்து வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து அனுப்பிரியா பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், ராணுவ வீரர் பெரியண்ணன் காதல் திருமணம் செய்து கொண்ட அனுப்பிரியாவுடன் வாழ முடியாது என்று போலீஸ் நிலையத்தில் அடாவடியுடன் கூறியுள்ளார்.

இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு காதல் ஜோடி பெரியண்ணன்-அனுப்பிரியா ஆகியோரை போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் ஆன்லைன் மூலம் பழகி காதலாகி, திருமணத்தில் முடிந்த அந்த பெண்ணின் வாழ்க்கை தற்போது ஆப்லைனில் முடிந்த நிலையில், வாழ்க்கையை தொலைத்த பெண்ணின் நிலை குறித்து பரிதாபமாக பெற்றோர் வருத்தத்துடன் காணப்பட்டனர்.

இது போன்று பல இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை நம்பி தங்களது வாழ்க்கையை பலரும் இழந்து வருகின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

Tags:    

Similar News