தமிழ்நாடு

கோவையில் ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு தபாலில் மாட்டு கோமியம் அனுப்பி நூதன போராட்டம்

Published On 2025-01-25 07:06 IST   |   Update On 2025-01-25 07:06:00 IST
  • திராவிட தமிழர் கட்சியினர் காமகோடிக்கு தபால் மூலம் கோமியம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தமிழிசைக்கு மாட்டு கோமியத்துடன் விருப்பப்பட்டால் மாட்டுக் கறியையும் அனுப்புவோம்.

மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த காமகோடி, "பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.

காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

காமகோடியின் கோமியம் தொடர்பான கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவையில் திராவிட தமிழர் கட்சியினர் காமகோடிக்கு தபால் மூலம் கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திராவிட தமிழர் கட்சியினர், "ஐ.ஐ.டி இயக்குனருக்கு ஆதரவாக பேசியதாக வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு மாட்டு கோமியத்துடன் விருப்பப்பட்டால் மாட்டுக் கறியையும் அனுப்புவதாக" தெரிவித்தனர்.

Tags:    

Similar News