சென்னையில் தீபாவளி பண்டிகை களைகட்டியது: தீ விபத்துக்களை தடுக்க 70 இடங்களில் ஏற்பாடு
- தீபாவளியையொட்டி பட்டாசுகளை வெடிப்பதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
- 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக பட்டாசு வெடிப்பார்கள்.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்கு புத்தாடை, இனிப்பு வகைகள், பட்டாசுகள் ஆகியவற்றை வாங்குவதற்காக கடந்த 3 நாட்களாகவே கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால் பொருட்களை வாங்கும் இறுதிக் கட்ட பணிகளில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
இன்று காலையில் இருந்து தமிழகம் முழுவதும் முக்கிய கடை வீதிகளில் மற்றும் வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட வணிக பகுதிகளில் பெரிய கடைகள் முதல் சாலையோர சிறிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் தீபாவளி இனிப்புகள், பட்டாசுகள் புத்தாடை ஆகியவற்றை வாங்கி மகிழ்ந்தனர்.
இதனால் கடைவீதிகளில் களை கட்டி காணப்பட்டது. இதையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கும் மக்கள் படையெடுத்தனர். வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்களில் பொது மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறி தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டார்கள். நேற்று மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் வண்டலூர் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. 2 நாட்களில் 3½ லட்சம் பேர் அரசு பஸ்களில் மட்டும் பயணம் செய்து சொந்த ஊர்களை சென்றடைந்துள்ள நிலையில் இன்றும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டனர்.
இதேபோன்று வெளி மாவட்டங்களில் இருந்தும் தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணித்தனர். ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 18 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சாதாரண உடையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். குறிப்பாக தி.நகர் ரங்கநாதன் தெருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி பட்டாசுகளை வெடிப்பதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக பட்டாசு வெடிப்பார்கள்.
இதுபோன்ற நேரங்களில் ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று குடிசை வீடுகள் தீப்பற்றிக் கொள்வது ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டும் அதுபோன்று தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நேற்று மாலையில் இருந்தே பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் சென்னையில் 1100 தீயணைப்பு வீரர்கள் தீபாவளி தீ விபத்தை தடுப்பதற்காக தயார் நிலையில் இருக்கிறார்கள். சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களிலும் 800 பேர் பணியாற்றி வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து 21 தீயணைப்பு வண்டிகளில் 300 பேர் வந்துள்ளனர்.
இவர்களோடு சேர்ந்து மொத்தம் 1100 தீயணைப்பு வீரர்கள் 70 இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 5 மணியில் இருந்தே தீயணைப்பு வண்டிகளுடன் தீபாவளி தீ தடுப்பு பணிகள் தொடங்கியுள்ள தீயணைப்பு வீரர்கள் வருகிற 2-ந் தேதி காலை வரையில் பணியில் நீடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் 1-ந் தேதி முழுவதுமே பலரும் பட்டாசுகளை வெடிப்பார்கள். இதனை கருத்தில் கொண்டே 2-ந் தேதி இரவு வரையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தை தடுக்கும் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என்பது பற்றி தமிழகம் முழுவதும் பள்ளி- கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்துள்ளோம். எனவே குழந்தைகள், பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று போலீசாரும் தீயணைப்பு துரையினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.