தமிழ்நாடு

கிராம நத்தம் பட்டாக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்- தமிழக அரசு ஏற்பாடு

Published On 2024-11-10 03:02 GMT   |   Update On 2024-11-10 03:02 GMT
  • இணையதளத்தில் பட்டா விவரங்களை பார்க்கும்போது மாவட்டம், தாலுகா, மற்றும் கிராம விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • தமிழகத்தில் மொத்தம் 317 தாலுகாக்கள் உள்ளன.

சென்னை:

நில மோசடிகளை தடுப்பதற்கு, தமிழக அரசு நிலம் சம்பந்தமான விவகாரங்களில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணைய வழி சேவைகள் மூலம் நிலம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்வதற்காக https://eservices.tn.gov. in/ என்ற இணையதளத்தை வடிவமைத்து உள்ளது.

அதில் பட்டா மாறுதல், பட்டா-சிட்டா விவரங்கள், அ பதிவேடு விவரங்கள், அரசு புறம்போக்கு நிலம், புலப்பட விவரங்கள், நகர நில அளவை வரைபடம் ஆகியவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் அளவு எவ்வளவு என்பது பொதுமக்களுக்கு துல்லியமாக தெரியும். அதன் மூலம் நில மோசடிகளில் சிக்காமல் தப்பித்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் கிராமங்களில் உள்ள நிலங்கள் பற்றிய விவரங்களை மட்டும் தெரிந்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நத்தம் பகுதிகளையும் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போது குறிப்பிட்ட தாலுகாவில் மட்டும் இந்த வசதி இருந்தது. ஆனால் இப்போது 245 தாலுகாவில் உள்ள கிராமங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு விவரங்களை தெரிந்து கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதாவது இந்த இணையதளத்தில் பட்டா விவரங்களை பார்க்கும்போது மாவட்டம், தாலுகா, மற்றும் கிராம விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். அதில் நத்தம் என்ற ஒரு பிரிவு இருக்கும். அதனை டிக் செய்தால் நத்தம் தொடர்பாக பட்டா-வரைபட விவரங்களை எளிதாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மொத்தம் 317 தாலுகாக்கள் உள்ளன. அதில் சென்னையில் உள்ள 12, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, கோவை தெற்கு ஆகிய 15 தாலுகாக்கள் முழுவதும் நகர் மயமாகி விட்டன. அங்கு விவசாய நிலங்கள் என்பது கிடையாது. அந்த தாலுகாக்கள் நகர அளவைக்கு சென்று விடுகின்றன. எனவே 302 தாலுகாவில் கிராம நத்தம் இடங்கள் உள்ளன.

அதில் தற்போது வரை 245 தாலுகா கிராம நத்தம் இடங்களின் பட்டா விவரங்களை பொதுமக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மீதமுள்ள 57 தாலுகா கிராம நத்தம் இடங்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் முழுமையாக முடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம நத்தம் இடங்களையும் பொதுமக்கள் எளிதாக ஆன்லைன் முறையில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நத்தம் என்றால் என்ன?

ஆங்கிலேயர்கள் ஒரு கிராம வரைபடத்தை தயாரிக்கும் போது அதில் உள்ள விவசாய நிலங்களை நஞ்சை, புஞ்சை எனவும், விவசாயம் நடக்காத இடத்தை தரிசு நிலம் எனவும் மற்றும் சாலைகள், ஏரிகள், ஆறுகள், குளங்கள் என அனைத்தையும் வகைப்படுத்தினர்.

பொதுமக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளை நத்தம் என வரையறுத்தனர். அதாவது நத்தம் பகுதியில் முதலில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு அரசு சார்பாக பட்டா வழங்கப்பட்டது. ஏனென்றால் அந்த இடங்களுக்கு பத்திரம் என்பது இருக்காது. நத்தம் இடத்தில் முதலில் ஆக்கிரமித்தவர்கள் பெயருக்கு பட்டா வழங்கப்படும். அந்த பட்டா அடிப்படையில் இப்போது தொடர்ச்சியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு வேறு ஒருவருக்கு கிரையம் செய்யப்படுகிறது. அந்த கிரையம் அடிப்படையில் இடம் வாங்கியவர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது உட்பிரிவு செய்யப்படாத நிலங்களை கிரையம் செய்தால் உடனடியாக தானியங்கி முறையில் உடனே பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை பத்திரப்பதிவு துறை செய்துள்ளது. இப்போது ஆன்லைன் முறையில் 245 தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்தாலும் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. எனவே இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

Tags:    

Similar News