குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
- முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனர்.
- முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறித் துறை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலி இடங்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூன் மாதம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14-ந்தேதி நடந்து முடிந்தது.
7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்த நிலையில், 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களுடன் கூடுதலாக 213 இடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 540 காலிப் பணியிடங்கள் வந்துள்ளன. ஏற்கனவே முதல்நிலைத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில் இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதியிருந்தனர். அந்தவகையில் ஒரு பணியிடத்துக்கு 228 பேர் போட்டியிடுகின்றனர்.