சென்னையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது
- நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
- ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே.
நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தமிழக பெண்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மனஅழுத்தத்திற்கும், சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்.
ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே! அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் சேர்ந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம்!," என்று விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் எழுதிய இக்கடிதத்தை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர். அப்போது அனுமதி இன்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்ததாக த.வெ.க. தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், விஜய் கைப்பட எழுதிய இந்த கடிதத்தின் நகலை சென்னை தி. நகரில் விநியோகம் செய்த த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர் .