தமிழ்நாடு

கவர்னர் பதவியை நீக்கக்கோரும் த.வெ.க. - ஆர்.என்.ரவியை சந்தித்த விஜய்.. ஏன் இந்த முரண்பாடு?

Published On 2024-12-30 10:31 GMT   |   Update On 2024-12-30 10:31 GMT
  • ராஜ்பவன் மாளிகைக்கு வருகை தந்த விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
  • மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஒரு புறம் போராட்டமும், சம்பவம் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக பெண்களுக்கு தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து நண்பகல் 12.45 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வருகை தந்த விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணா பல்கலைக் கழக சம்பவம் மட்டும் அல்லாமல் பிற விவகாரங்கள் குறித்து மனுவாக கவர்னரிடம் விஜய் அளித்துள்ளார். சுமார் 10 நிமிடங்களே இச்சந்திப்பானது நடைபெற்றுள்ளது.

விஜய் அளித்த மனுவில், தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலுக்கான நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்துள்ளார்.

இதனிடையே, எங்கள் கோரிக்கைகளை கேட்ட கவர்னர் அவற்றை பரிசீலிப்பதாக கூறியதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொள்கையில் கவர்னருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துவிட்டு தற்போது கவர்னரை விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொள்கையில் மாநில உரிமை எனும் தலைப்பில், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tags:    

Similar News