ஆணாதிக்க சிந்தனை உள்ளவராக இருக்கிறார் சீமான்- வன்னி அரசு
- மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.
- நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"பெண் ஒடுக்குமுறை என்பது யுகம் யுகமாக எல்லாச் சமூகங்களிலும், எல்லாப் பண்பாடுகளிலும் நிலவி வந்த ஒரு சமூக அநீதி. இந்தச் சமூக அநீதிமுறை இன்னும் இந்தப் பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை.
எமது சமூகக் கட்டமைப்பில் பெண்ணினம் மிகவும் மோசமான ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்டு நிற்கிறது. மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதார வாழ்வு ஒரு புறமும், அரச அடக்குமுறை அழுத்தங்கள் மறுபுறமும், ஆணாதிக்கக் கொடுமைகள் இன்னொரு புறமுமாகப் பல பரிமாணங்களில் எமது பெண்கள் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறார்கள்.
நீண்ட நெடுங்காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்த மூட நம்பிக்கைகளும், இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து தோற்றம் கொண்ட சமூக வழக்குகளும், சம்பிரதாயங்களும், எமது பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றன. ஆணாதிக்க அடக்குமுறையாலும், வன்முறையாலும், சாதியம், சீதனம் என்ற கொடுமைகளாலும் தமிழீழப் பெண்ணினம் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறது.
எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றுத் தேவை. இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. எமது மண்ணின் விடுதலை, பெண்ணின் விடுதலைக்கு மட்டுமன்றி எமது இனத்தின் விடுதலைக்கும் அத்திவாரமானது"
-அனைத்துலக பெண்கள் தினத்தில் 1992 ஆம் ஆண்டு மேதகு பிரபாகரன் விடுத்த அறிக்கையிலிருந்து…
பெண்கள் விடுதலை குறித்து மேதகு பிரபாகரன் பார்வை தனித்துவமானது. அதனால் தான் பெண்கள் படையணியை 1985 ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் மேதகு பிரபாகரன். ஆனால் சீமான் நேற்று (28.2.2025)மட்டும் கொடுத்த பேட்டிகளை பார்த்தால் எவ்வளவு ஆணாதிக்க சிந்தனை உள்ளவராக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். பொது வெளியில் பெண்களை இவ்வளவு இழிவாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.
தான் செய்த பாலியல் சம்பவங்களை பெருமையோடு Normalize பண்ணுகிறார். அருவருப்பான உடல் மொழியோடும் அநாகரீகமான உரையாடலை தொடரும் சீமானை மாதர் சங்கங்கள் மற்றும் #meetoo என்ற பெயரில் இயங்குபவர்கள் இதுவரை கண்டிக்கவில்லை.
மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?
அதிலும் விசாரணைக்கு மேதகு பிரபாகரன் படத்தோடு வந்திருப்பது எத்தனை கொடுமையான அயோக்கியத்தனம்?
தமிழ்த்தேசியத்தின் அரசியல் இது தானா?
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!
வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்றார் பாரதி.
இன்று தமிழ்த்தேசியத்தின் பெயரில் அதுவும் மேதகு பிரபாகரன் பெயரில் பெண்களை இழிவுபடுத்துவதும் அதை பெருமைப்படுத்துவதும் அருவருப்பின் உச்சம். அமைதி காப்பது அதனினும் உச்சம் என்று கூறியுள்ளார்.