புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு விஜய் வாழ்த்து
- தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை:
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர் என தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக 120 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டார்.
தவெகவில் புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.