விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது எப்போது?- இஸ்ரோ துணை இயக்குனர் பேட்டி
- உலகில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளியில் சாதனை படைத்துள்ளது.
- குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்:
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ விண்வெளித்துறை துணை இயக்குனர் கிரகதுரை கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இஸ்ரோ அனுப்பும் அனைத்து ராக்கெட்களையும் ஆன்லைனில் பார்க்கும்படி ஒளிபரப்பு செய்து வருகிறோம். உலகில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளியில் சாதனை படைத்துள்ளது. அதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், தொழில், கல்வி உள்பட எல்லா துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தரவுகளை திரட்ட வேண்டும். அதை ஆய்வு செய்து தீர்வு கொடுத்தால்தான் இந்தியா 2047-ல் வளர்ந்த நாடாக மாறும். இதை சாத்தியமாக்குவது மாணவர்கள் கையில் உள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது.
முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. அதன்பின் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொறியியல் பிரிவுகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பி.எஸ்சி., இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.