செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை - சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர்:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல், கொரோனாவால் உலகளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கியுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் சிங்கப்பூரில் ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங் தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரில் தற்போதைய நிலவரப்படி கொரோனோவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.