கலிபோர்னியா சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்
- சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம்
- கவர்னர் ஒப்புதல் அளித்ததும் சட்டமாக செயல்படும்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து.
சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சட்ட மசோதா உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அம்மாநில கவர்னர் கவின் நியூசோமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக்கப்படும்.
மசோதா நிறைவேற்றியதன் மூலம், சாதி பாகுபாடு எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது.
உறுப்பினர் ஆயிஷா வஹாப் அறிமுகப்படுத்திய இந்த மசோதாவிற்கு ஏராளமான சாதி சமத்துவ மக்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.
எஸ்.பி.403 சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த வஹாப், நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றார்.
அதேவேளையில் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி (CoHNA) கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளது.