தாய்லாந்தில் முடங்கி கிடக்கும் கோத்தபய ராஜபக்சே- அடுத்த வாரம் முதல் வெளியில் செல்ல அனுமதி
- அடுத்தவாரம் முதல் விஷேச பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி.
- அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்.
இலங்கையில் பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை துறந்து மனைவியுடன் தப்பி ஓடினார். முதலில் மாலத்தீவுக்கு சென்ற அவர் பின்னர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார்.
தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்து பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். பாதுகாப்பு கருதி அவர் ஓட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அவர் ஓட்டல் அறையிலேயே முடங்கி கிடக்கிறார். இதனால் அவர் வெளி உலகத்தை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது இந்த ஓட்டல் அறையில் முடங்கி இருப்பது ஜெயிலில் இருப்பது போன்று உணர்வை தருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தநிலையில் அவர் அடுத்த வாரம் முதல் விஷேச பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.
இதை கேட்டு கோத்தபய ராஜபக்சே மகிழ்ச்சி அடைந்துள்ளார். முன்னதாக அவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் கோத்தபய ராஜபக்சே சொந்த நாடான இலங்கைக்கு திரும்பவே விரும்புவதாக தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தாய்லாந்தில் சில வாரங்கள் தங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே விரைவில் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்பிறகு கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கேவுடன் அவர் போனில் பேசியதாகவும், அப்போது இது பற்றி அவர்கள் விவாதித்தாகவும் தெரிகிறது.